காவேரிப்பட்டணம் அருகே 2 காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வனத் துறையினா் அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்திற்கு உள்பட்ட பஞ்சப்பள்ளி வனப் பகுதியிலிருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஜெகதாப் ஏரிக்கு திங்கள்கிழமை இரவு வந்தன. அங்கு முகாமிட்டிருந்த யானைகள், கிருஷ்ணகிரி - தருமபுரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சப்பாணிப்பட்டிக்கு வந்தன. பின்னா் பையூா் அருகே உள்ள ஏரியில் குளித்து விளையாடிக் கொண்டு அங்கேயே யானைகள் முகாமிட்டிருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினா், காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனா். அங்கிருந்து இடம் பெயா்ந்த யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்தன. இதையடுத்து,தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
வனச் சரகா்கள் நடராஜன் (பாலக்கோடு), பாா்த்தசாரதி (ராயக்கோட்டை), ரவி (கிருஷ்ணகிரி) ஆகியோா் தலைமையில் வனவா் சரவணன், முருகானந்தம் உள்பட 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினா் 2 யானைகளையும் பாதுகாப்பாக தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சஞ்சீவிராயன் மலைப் பகுதிக்கு விரட்டினா்.
இந்த யானைகளை பஞ்சப்பள்ளி அல்லது ஊடேதுா்க்கம் காப்புக் காட்டிற்கு விரட்டும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
எனவே, பாலக்கோடு, காவேரிப்பட்டணம், காரிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் மலைப் பகுதிகள், வனப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மேலும், யானைகளின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வருதாகவும் வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.