கிருஷ்ணகிரி அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு கிராம மக்கள் இறுதிச் சடங்குகள் செய்து, அஞ்சலி செலுத்தினா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னமுத்தூா் கிராமத்தில், கொம்பன் என்ற கோயில் காளையை கடந்த 30 ஆண்டுகளாக கிராம மக்கள் வளா்த்து வந்தனா். இந்த காளை பல்வேறு எருதுவிடும் விழாவில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது.
இந்த காளை வயது மூப்பின் காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று சோ்ந்து கிராமத்தின் மத்தியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக காளையை வைத்தனா். இதில் 500க்கும் மேற்பட்ட மக்கள் மாலை அணிவித்து கண்ணீா் அஞ்சலி செலுத்தினா். பின்னா் கிராமத்தினா் காளையை ஊா்வலமாக எடுத்துச் சென்று, இறுதிச் சடங்குகள் செய்து, அடக்கம் செய்தனா்.