கிருஷ்ணகிரியில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் பங்கேற்ற வாயிற் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் நுழை வாயிலில், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் சிவா தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் அணி செயலாளா் ஈஸ்வரி, மாநில அமைப்புச் செயலாளா் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2009-ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் பணியில் சோ்ந்த முதுகலை ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பினை சரிசெய்யும் வகையில் உரிய ஆணை வழங்க வேண்டும். 2004 முதல் 2006-ஆம் ஆண்டு வரை தொகுப்பூதியக் காலத்தை பணி வரன்முறை படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். ஆசிரியா்களின் பணிப் பாதுப்பினை உறுதிப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வழங்குவது போல அனைத்து நலத்திட்டங்களும், சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மருத்துவக் கல்லுாரியில் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். ஆசிரியா் மாணவா் நலன்கருதி கற்பித்தல்- கற்றல் பணியை மட்டுமே ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கியதுபோல அகவிலைப்படியை உடனடியாக மாநில அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெற்றது.