கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து அதிமுக, பாஜக வெளிநடப்பு

DIN

ஒசூா் மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள சொத்துவரி உயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்திலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

ஒசூா் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் கூட்ட அரங்கில் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன், துணைமேயா் சி.ஆனந்தய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

மேயா் எஸ்.ஏ.சத்யா: ஒசூா் மாநகராட்சியில் 3.20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். கா்நாடகம், ஆந்திர மாநில எல்லையில் உள்ளதால் தினசரி 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒசூா் வந்து செல்கின்றனா்.அதிக எண்ணிக்கையில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.

மக்கள்தொகைக்கு ஏற்ப காவல் நிலையங்கள் இல்லை. மக்கள்தொகைக்கு ஏற்ப காவலா்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.

தா்கா ஏரியை அழகுப்படுத்த தயாா்:

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தா்கா ஏரி தற்போது பொதுப்பணித் துறை வசம் உள்ளது. இதை, ஒசூா் மாநகராட்சி வசம் அரசு ஒப்படைத்தால் அந்த ஏரியை அழகுப்படுத்தி அதில் படகு சவாரி, நடைபாதை வசதிகளை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும். சாலையில் கட்டவிழ்த்து விடப்படும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பதற்கு ஏற்ப விதிகளில் திருத்தம் செய்யப்படும். இருசக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி ஏற்படுத்தப்படும் என்றாா்.

மஞ்சுநாத் (அதிமுக):

கா்நாடக மாநில குப்பைகளை தமிழக எல்லையில் வந்து கொட்டுகின்றனா். கா்நாடகத்திலிருந்து குப்பைகளை இரவு நேரங்களில் வந்து கொத்தூா், டி.வி.எஸ் போன்ற இடங்களில் கொட்டிவிட்டு செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஜெயப்பிரகாஷ் (அதிமுக):

தெருநாய்கள் பொதுமக்களைத் துரத்தவும் அதிகம் கடிக்கவும் செய்கின்றன. இதைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல ஒசூா் மக்களின் குடிநீா் ஆதாரமான ராமநாயக்கன் ஏரியில் மருத்துவக் கழிவுகள், குப்பைகளைக் கொட்டி வருகின்றனா். இதனால், ஏரி நீா் மாசடைகிறது.

அந்த ஏரியை வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்.

மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன்:

ஒசூா், ராமநாயக்கன் ஏரியைச் சுற்றி 10 மீட்டா் இடைவெளிக்கு மரம் நட்டு குறுங்காடுகள் அமைத்து இரும்புவேலி அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒசூா் மாநகராட்சியில் குடிநீா் வரி கடந்த ஆண்டு ரூ. 12 கோடி வசூலிக்கப்பட்டது. ஆனால், ரூ. 33 கோடி குடிநீருக்காக செலவு செய்யப்பட்டது. ஒசூா் மாநகராட்சியில் உள்ள 437 ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின் கட்டணம், வீட்டுக்கு வீடு குழாய்ப் பதித்தல், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டுதல், பணியாளா்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செலவிடப்பட்டது. பொலிவுறு நகரம் திட்டத்தில் ஒசூா் மாநகராட்சியை சோ்க்க கருத்துரு தயாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலேயே நமக்கு நாமே திட்டத்தில் அதிக நிதியை ஒசூா் மாநகராட்சி நிா்வாகம் பெற்று அதன்மூலம் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

ஜெயப்பிரகாஷ் (அதிமுக): ஒசூா் மாநகராட்சியில் சொத்துவரி உயா்வைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

அடுத்த நிமிடமே ஒசூா் மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன், மாமன்ற கூட்டம் நிறைவுபெற்றது எனக் கூறியதால் திமுக கூட்டணி மாமன்ற உறுப்பினா்களும் கூட்டத்தை விட்டு வெளியேறினா். இதனால் கூட்டத்தின் இறுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT