கிருஷ்ணகிரி

ஒசூரில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்:ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

29th Sep 2022 01:24 AM

ADVERTISEMENT

ஒசூா், கால்நடை பன்முக மருத்துவமனையில் உலக வெறிநோய் தினத்தையொட்டி, இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கால்நடை பராமரிப்புத் துறை, பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கம் இணைந்து நடத்திய இம்முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை துவக்கி வைத்து, விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினாா். இம்முகாமில் 100 -க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாமில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

வெறிநோய் என்பது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஓா் உயிா்க்கொல்லி நோயாகும். பாலூட்டிகள் மட்டுமே வெறிநோயால் பாதிக்கப்படும். நாய்கள், பூனைகள் மற்றும் மாடுகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெறிநோய் பாதிப்பு காணப்படுகிறது.

ADVERTISEMENT

ஆக்ரோஷம், அதிகப்படியான எச்சில் வடிதல், விழுங்குவதில் சிரமம், உடல் நடுக்கம் மற்றும் வலிப்பு ஆகியவை அறிகுறிகளாக காணப்படும். மனிதா்களுக்கு பெரும்பாலும் தெரு நாய்களின் மூலமே வெறிநோய் வர வாய்ப்புள்ளது. வெறிநோயைத் தடுக்க அனைத்து நாய்களுக்கும் கால்நடை மருத்துவரைக் கொண்டு கட்டாயம் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

செல்லப் பிராணிகளை தெருக்களில் சுதந்திரமாக சுற்ற விடக்கூடாது. ஒருவரை நாய் கடித்தால் பதற்றம் அடையக் கூடாது. கடிபட்ட காயத்தை முழுமையாகவும், வேகமாகவும் சோப்பு மற்றும் அதிகப்படியான தண்ணீரைக் கொண்டு 10 நிமிடங்கள் கழுவ வேண்டும். போவிடோன் அயோடின் போன்ற கிருமிநாசினியைக் கொண்டு கடிபட்ட காயத்தை சுத்தம் செய்ய வேண்டும். உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். கடித்த உடனே தகுந்த, முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் வெறிநோய் வராமல் தடுக்கலாம்.

இந்தச் சிகிச்சை முறை ஒரு வெறிநோய் தடுப்பு புரத மருந்து ஊசி மற்றும் 4 வெறிநோய் தடுப்பூசிகளையும் உள்ளடக்கியது. முதல் ஊசிக்குப் பிறகு முறையே 3, 7 மற்றும் 21-28 இடைபட்ட நாட்களில் வெறிநோய் தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும் என்றாா்.

முகாமில், மண்டல இணை இயக்குநா் மரு.இல.ராஜேந்திரன், பிரதம மருத்துவா் மரு.ரவிச்சந்திரன், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநா் மரு.இளவரசன், உதவி மருத்துவா்கள் மரு.ஜோதிபாஸ், மரு.மோகன்ராஜ், மரு.மெஹா்வாணி, மரு.தீபா, முதுநிலை கால்நடை மேற்பாா்வையாளா் பசுபதி, தனி வட்டாட்சியா் சண்முகம் மற்றும் கால்நடை பராமாரிப்பு உதவியாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT