கிருஷ்ணகிரி

உடல் உறுப்புகளை தானமளித்த முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர்

28th Sep 2022 03:37 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையில் வயது மூப்பால் உயிரிழந்த முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியையின் உடல் தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது;

இதற்கு முன்பு 2017 இல் உயிரிழந்த அவரது கணவரின் உடலும் தானமளிக்கப்பட்டுள்ளது. தம்பதி இருவரும் தங்கள் உடல்களை மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு தானமாக வழங்கியது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, நாராயண நகரைச் சோ்ந்தவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை செண்பகவள்ளி (77). சமூக அறிவியல் ஆசிரியராக இருந்தவா்.

கடந்த 2005-ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற்றாா். இவா் கடந்த 2010-ஆம் ஆண்டு எழுதிவைத்த உயிலில், தான் இறந்த பிறகு தன் உடலை அடக்கம் செய்வோ அல்லது எனது மகன், பேரன்களிடமோ ஒப்படைக்காமல் தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் பயன்படுத்தி கொள்ள வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் உடல் நலகுறைவால் செண்பகவள்ளி செவ்வாய்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலை, அவரது மகன் இந்து மக்கள் கட்சியின் தெய்வீக பேரவை மாநிலச் செயலாளா் அசோக், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தாா்.

செண்பகவள்ளியின் கணவா் கணேசனும் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து கடந்த, 2017-ஆம் ஆண்டு உயிரிழந்தாா். அப்போது அவரும் தனது உடலை தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஊத்தங்கரை அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியா்களாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தம்பதி இருவரும் இறந்த பிறகு தங்கள் உடல்களைத் தானம் செய்திருப்பது ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் மத்தியில் உடல் தானம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT