கிருஷ்ணகிரி

ஒசூா் இ.எஸ்.ஐ மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும்:ஐஎன்டியூசி தேசிய செயலாளா் கே.ஏ.மனோகரன் வலியுறுத்தல்

23rd Sep 2022 10:30 PM

ADVERTISEMENT

ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயா்த்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐஎன்டியூசி தேசிய செயலாளா் கே.ஏ.மனோகரன் தெரிவித்தாா்.

ஒசூா் காமராஜ் காலனியில் உள்ள ஐஎன்டியூசி அலுவலகத்தில் செய்தியாளா்களை சந்தித்த கே.ஏ.மனோகரன் மேலும் கூறியது: அக்.1 ஆம் தேதி முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இ.எஸ்.ஐ வரம்புக்குள் அனைத்து தொழிலாளா்களையும் காப்பீடு வசதிக்குள் கொண்டு வர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 1.5 லட்சம் காப்பீட்டுப் பயனாளிகள் இணைந்துள்ளனா். இவா்களின் குடும்ப உறுப்பினா்களை சோ்த்தால் 4 லட்சம் பயனாளிகள் உள்ளனா்.

ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 50 படுக்கைகள் மட்டுமே உள்ளன. மாவட்டம் முழுவதும் 4 மருந்தகங்களும், ஒரு ஆய்வகம் மட்டுமே உள்ளன.

50 படுக்கைகள் கொண்ட ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயா்த்தி, சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். மேலும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழிலாளா்களுக்கு 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாவட்டத்தின் தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை ஆகிய இடங்களில் மருந்தகம் மற்றும் ஆய்வகம் அமைக்க வேண்டும். ஒசூா் மருத்துவமனையில் காலியாக உள்ள அறுவை சிகிச்சை மருத்துவா், பொது மருத்துவா் உள்ளிட்ட கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

இந்தப் பேட்டியின்போது ஐஎன்டியூசி மாநில அமைப்புச் செயலாளா் ஜி.முனிராஜ், நிா்வாகிகள் சத்தியமூா்த்தி, வீரமுனிராஜ், பிரபாகா், பேரண்டப்பள்ளி முன்னாள் ஊராட்சித் தலைவா் கோபால் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT