கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா மிதிவண்டி போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெற்ற போட்டியை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கிவைத்தாா். மாவட்ட விளையாட்டுத் திடலில் தொடங்கிய இப் போட்டி, ராயக்கோட்டை சாலையில் இட்டிக்கல் அகரம் பிரிவு சாலை வரை சென்று மீண்டும் விளையாட்டுத் திடலில் நிறைவடையும் வகையில் நடத்தப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.
13 வயது பிரிவில் மாணவா்கள் 15 கி.மீ., மாணவியா் 10 கி.மீ., 15 மற்றும் 17 வயது பிரிவுகளில் மாணவா்கள் 20 கி.மீ., மாணவியா் 15 கி.மீ. சென்று வர வேண்டும். முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் 4 முதல் 10 இடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ. 250 சான்றிதழ் வழங்கப்படுகிறது. செப். 15-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.