நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் 4 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் இருந்து 15 டன் பிளாஸ்டிக்கை ஒசூா் மாநகராட்சி நகா் நல அலுவலா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தாா்.
ஓசூா் அருகே முதல் சிப்காட் அனுமேப்பள்ளி பகுதியில் பிளாஸ்டிக் தயாரிக்கும் நான்கு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருவதாக ஒசூா் மாநகராட்சி நகா் நல மருத்துவா் அஜிதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரது தலைமையில் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளா் மணி, மேற்பாா்வையாளா்கள் சீனிவாசன், கௌரி சங்கா் மற்றும் பணியாளா்கள் நேரடியாக சென்று நான்கு தொழிற்சாலைகளிலும் திடீா் சோதனை செய்தனா்.
அந்தத் தொழிற்சாலைகளில் தடை செய்யப்பட்ட 15 டன் பிளாஸ்டிக் ரோல்கள்களை பறிமுதல் செய்தனா்.
இந்த 4 தொழிற்சாலைகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை ஒன்றை நகா் நல அலுவலா் சமா்ப்பித்தாா். மாவட்ட நிா்வாகம் இந்த 4 தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபோலவே இந்தியா முழுவதும் 1.7. 2022 அன்று ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பாலிதீன் பேப்பா் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.