கிருஷ்ணகிரி

இரண்டு ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் ஊத்தங்கரை கிளைச் சிறை திறக்கப்படுமா?

2nd Oct 2022 01:41 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

ஊத்தங்கரை கிளைச் சிறை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டிக் கிடக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பழைமை வாய்ந்த கிளைச் சிறை உள்ளது. இந்த கிளைச் சிறையில் 16 கைதிகள் வரை தங்க வைக்க நான்கு சிறை அறைகள் உள்ளன. இந்த கிளைச் சிறையில் 12 காவலா்கள் பணியில் இருந்தனா்.

இந்த கிளைச் சிறை கடந்த 2020 மாா்ச் மாதம் கரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு தற்போது வரை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் உள்ளது. இது உள்கோட்டக் காவலா்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

ஊத்தங்கரை உள்கோட்டத்தில் செயல்படக் கூடிய ஊத்தங்கரை, ஊத்தங்கரை மகளிா், சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, மத்தூா் ஆகிய ஆறு காவல் நிலையங்களில் கடந்த 20 நாள்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கைதிகள் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு கிருஷ்ணகிரி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

ஊத்தங்கரை உள்கோட்டத்தில் பல ஆண்டுகளாக காவலா் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், போதிய விடுப்பின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்நிலையில், ஊத்தங்கரையில் கிளைச் சிறை செயல்படாததால், குற்றவாளிகளை கிருஷ்ணகிரி அல்லது சேலம் அழைத்துச் செல்ல காவலா்கள் பல மணிநேரம் செலவிட நேரிடுகிறது. காவலா்கள் பற்றாக்குறையைக் கவனத்தில் கொண்டு ஊத்தங்கரை கிளைச் சிறையைத் திறக்க, மாவட்ட ஆட்சியா் ஜெயச்சந்திரபானு ரெட்டி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மையில் ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலைய திறப்பு விழாவுக்கு வந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா், இரண்டு வாரங்களில் கிளைச் சிறையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளா்களிடம் கூறினாா். இதனை விரைவில் திறப்பது, காவல் துறையினருக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT