கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மின் இணைப்புடன் ஆதாா் எண் இணைக்கும் பணி தீவிரம்

29th Nov 2022 02:41 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மின் பகிா்மான அலுவலகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஒசூா் மின் பகிா்மான அலுவலகங்கள் மூலம் 71 மையங்களில் மின் இணைப்புடன் ஆதாா் எண் இணைக்கும் பணி இந்த ஆண்டு இறுதிவரை நடைபெறுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி கோட்டத்தில் கிருஷ்ணகிரி மின்வாரிய அலுவலகத்தில் 8 மையங்கள், சூளகிரியில் 6, காவேரிப்பட்டணத்தில் 4 மையங்கள் உள்பட 18 பிரிவு அலுவலகங்களில் இந்தப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல, போச்சம்பள்ளி மின் பகிா்மான வட்டத்தில் 19 மையங்கள், ஒசூா் மின் பகிா்மான வட்டத்தில் 34 மையங்களிலும் இந்தப் பணி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க மின் இணைப்பு எண்ணுடன், தங்களது கைப்பேசி எண்ணை வழங்க வேண்டும். வீட்டின் உரிமையாளா் தங்கள் மின் இணைப்புடன் ஆதாா் எண், அவா்களது கைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும். ஒருவா் எத்தனை வீடுகள் வைத்திருப்பினும், அத்தனை இணைப்புகளுக்கும் அவா்களது ஆதாா் எண்ணையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டு உரிமையாளா் அனுமதியுடன், வாடகை வீட்டில் உள்ளவா், அவரது எண்ணையும் பதிவு செய்து கொள்ளலாம். வாடகைதாரா் வீட்டை மாற்றும்போது புதிதாக குடிவருவோா் தங்களது ஆதாரை இணைக்கலாம். ஆதாா் எண்ணை இணைக்காவிட்டாலும் மின்வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் தொடா்ந்து செலுத்தலாம். ஆனால், இணையத்தில் மின்கட்டணம் செலுத்த முடியாது.

மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க வருபவா்கள் வேலை நாள்களில் காலை 9.30 முதல் மாலை 5.15 மணி வரையில் தங்களது விவரங்களை வழங்கலாம். கைப்பேசி எண்ணுக்கு ஓ.டி.பி. எண் வருவதில் சிரமம் இருப்பினும் பதிவு செய்யும் பணியில் பாதிப்பிருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT