கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியைக் கண்டித்துவிளையாட்டு வீரா்கள் போராட்டம்

28th Nov 2022 01:34 AM

ADVERTISEMENT

 

ஒசூா், அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகே குப்பைகளை தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை மையம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விளையாட்டு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒசூா், தளி சாலையில் அந்திவாடி விளையாட்டு மைதானம் உள்ளது. சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்த மைதானம் மற்றும் விளையாட்டு திடலில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள், பள்ளி மாணவா்கள் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து விளையாடி வருகின்றனா்; பொதுமக்கள் இந்த விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி செய்கின்றனா். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த விளையாட்டு மைதானம் அருகே ஒசூா் மாநகராட்சி சாா்பில் குப்பைகளை தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதற்கு அப்பகுதி பொதுமக்கள், விளையாட்டு வீரா்கள், குடியிருப்புவாசிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். விளையாட்டு மைதானம் அருகே குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உருவாகும். எனவே, இதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள், பள்ளி மாணவா்கள் மாநகராட்சியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தவும், உலக தரம் வாய்ந்த விளையாட்டு மைதானத்தை நிறுவவும் நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT