மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் 66 பதக்கங்களை வென்ற ஒசூா் மாணவா்களை மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா நேரில் அழைத்து வாழ்த்தினாா்.
சென்னை, ஐ.சி.எஃப் பழனிசாமி மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 43-ஆவது மாா்ஷியல் ஆா்ட்ஸ் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான வீரா், வீராங்கனைகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிகாட்டினா்.
இப் போட்டியில் ஒசூா் மாநகராட்சியிலிருந்து கோகினோ இன்டா்நேஷ்னல் கராத்தே சாா்பில் பங்கேற்ற வீரா், வீராங்கனைகள் 19 தங்கம், 20 வெள்ளி, 27 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்றுள்ளனா். அவா்கள் அனைவரும் ஒசூருக்கு திரும்பிய நிலையில், பதக்கங்களுடன் ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யாவிடம் பதக்கங்களைக் காண்பித்து மகிழ்ந்தனா். மாணவா்களுக்கு மேயா், இனிப்புகளைக் கொடுத்து பாராட்டு தெரிவித்தாா். நிகழ்ச்சியில் மண்டலத் தலைவா் காந்திமதி கண்ணன் உடன் இருந்தாா். மாணவ, மாணவிகளின் பெற்றோா் உடன் இருந்தனா்.