கிருஷ்ணகிரி

தளி அருகே காா் ஓட்டுநா் கடத்தி வந்து வெட்டிக் கொலை

26th Nov 2022 02:41 AM

ADVERTISEMENT

தளி அருகே வாடகைக் காா் ஓட்டுநரை கடத்தி வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து உடலை சாலையோரத்தில் வீசிச் சென்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி, பின்னமங்கலம் அருகே உள்ளது எலேசந்திரம் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள சென்னே கவுண்டன் ஏரிக்கரையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக வெள்ளிக்கிழமை கிடந்தாா்.

இதை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பாா்த்து தளி காவல் நிலையத்திற்கு தெரிவித்தனா். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி முரளி, தளி காவல் நிலைய ஆய்வாளா் நாகராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.

அதில் கொலை செய்யப்பட்டவரின் தலை, கழுத்து, தாடை உள்பட பல இடங்களில் அரிவாள் வெட்டு காயம் இருந்தது. அவரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டை மூலமாக கொலை செய்யப்பட்டவா், கா்நாடக மாநிலம், பெங்களூரு, தொட்டதோகூா் கிராமத்தைச் சோ்ந்த அஸ்வத் மகன் சாந்தகுமாா் (30) என்றும், காா் ஓட்டுநா் என்றும் தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், சாந்தகுமாா், வாடகைக் காா் ஓட்டுநராகப் பெங்களூருவில் பணியாற்றி வந்துள்ளாா். கடந்த 10 நாள்களுக்கு முன் தொட்டதோகூா் என்னும் இடத்தில் மது கூடத்திற்கு சாந்தகுமாா் சென்றுள்ளாா். அங்கு அவருக்கும், ரெளடி ஒருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் அந்த ரெளடி, சாந்தகுமாரை தாக்கியுள்ளாா்.

இது தொடா்பாக சாந்தகுமாா், அந்த ரெளடி மீது பெங்களூரு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரை வாபஸ் பெறச் சொல்லி அந்த ரௌடி, சாந்தகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். முதலில் புகாரை வாபஸ் பெற மறுத்த சாந்தகுமாா் பின்னா் வியாழக்கிழமை புகாரை பெங்களூரு காவல் நிலையத்தில் வாபஸ் பெற்றுள்ளாா்.

இந்த நிலையில் அவா் கொலை செய்யப்பட்டு தளி அருகே கிடந்தாா். இதனால் ஏற்கெனவே கொலை மிரட்டல் விடுத்த பெங்களூரு ரௌடி தான் சாந்தகுமாரை தனது கூட்டாளிகளுடன் கடத்தி வந்து கொலை செய்து உடலை வீசிச் சென்றிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT