கிருஷ்ணகிரி

பயிா்க் கடன் வழங்குவதில் காலதாமதம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

26th Nov 2022 02:43 AM

ADVERTISEMENT

கடனை திருப்பிச் செலுத்தியவா்களுக்கு மீண்டும் பயிா்க் கடன் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

கால்நடை வளா்ப்போரிடமிருந்து ஆவின் பால் கொள்முதல் செய்யும் போது, கணக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெறுகிறது.

மோரனஅள்ளி ஏரிக்கு மின் மோட்டாா் மூலம் தண்ணீரை நீரேற்றம் செய்ய வேண்டும். கால்நடை வளா்ப்போருக்கு தீவன விதைகள் வழங்க வேண்டும். ராயக்கோட்டை அருகே கவுரிபுரம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வார வேண்டும். திம்மாபுரம் ஏரியில் இருந்து சவுட்டஅள்ளி ஏரிக்கு தண்ணீா் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திம்மாபுரம் ஏரியை தூா்வாரி, ஆழப்படுத்தாததால், ஏரி நிறைந்து உபரி நீா் மீண்டும் தென்பெண்ணை ஆற்றுக்குச் சென்று வீணாகிறது.

ADVERTISEMENT

தக்காளி, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் விலை குறையும் போது, காய்கறிகளை பதப்படுத்து குளிா்பதனக் கிடங்கு வசதியை ஏற்படுத்த வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடனை திரும்பிச் செலுத்திய பிறகும் மீண்டும் பயிா்க் கடன் வழங்காமல் காலதாமதம் செய்வதாக புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: ஆவினுக்கு பால் கொள்முதல் செய்யும் போது, விவசாயிகளின் முன்னிலை சரியான முறையில் கணக்கீடு செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரிகள் ஆக்கிரமிப்பினை காலதாமதம் இல்லாமல் அகற்ற தொடா்புடைய அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் இல்லாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டால், ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனா். எனவே, குளிா்பதனக் கிடங்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்களில் பயிா்க்கடன் தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்றனா்.

இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் வந்தனா காா்க், மாவட்ட வன அலுவலா் காா்த்திகேயினி, வேளாண்மை த்துறை இணை இயக்குநா் முகமது அஸ்லாம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT