கிருஷ்ணகிரி

நிலத்தகராறில் உயிரிழப்புக்கு காரணமான விவசாயிக்கு 5 ஆண்டு சிறை

26th Nov 2022 02:43 AM

ADVERTISEMENT

உறவினா்களிடையே ஏற்பட்ட நிலத் தகராறில் உயிரிழப்புக்கு காரணமான விவசாயிக்கு கிருஷ்ணகிரி கூடுதல் அமா்வு நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள மோரமடுகுவை அடுத்துள்ள துடுக்கனஅள்ளியைச் சோ்ந்தவா் காவேரி (41). அதே பகுதியைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (65). உறவினா்களான இவா்களுக்கு இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி காவேரி, அவரது மனைவி செல்வி (37), உறவினரான கோவிந்தன் (64) ஆகியோா் ராஜமாணிக்கம் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனா். இதில், கோவிந்தன் அரிவாளால் ராஜமாணிக்கத்தை வெட்டினாா். இதில் பலத்த காயம் அடைந்த ராஜமாணிக்கத்தை அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு, கிருஷ்ணகிரி கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நீதிபதி தாமோதரன் தீா்ப்பு வழங்கினாா். அதில், ராஜமாணிக்கம் உயிரிழப்புக்கு முக்கிய காரணமான கோவிந்தன் என்பவருக்கு கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கியதற்காக 5 ஆண்டு சிறை, ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதற்காக ஓராண்டு சிறை, ரூ.1,000அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், காவேரி, அவரது மனைவி செல்விக்கு ரூ. 2,000 அபராதம் மட்டும் விதித்து தீா்ப்பளித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT