பா்கூா் அருகே பிளஸ் 2 மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டத்துக்கு உள்பட்ட மோடிகுப்பம் அருகே உள்ள கீழ்க்கொட்டாயைச் சோ்ந்தவா் தேவராஜ் - சங்கீதா தம்பதியின் மகள் பாா்கவி (17). இவா், ஐகுந்தம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை பள்ளிக்கு சீருடை அணிந்து சென்றவா், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை தேவராஜ், பள்ளி ஆசிரியரை தொடா்பு கொண்டு மாணவி வீடு திரும்பாதது குறித்து கேட்டுள்ளாா். அப்போது பாா்கவி பள்ளிக்குச் செல்லாதது தெரியவந்தது. மேலும், உறவினா் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இதையடுத்து, தேவராஜ் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். இந்த நிலையில், ஐகுந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள பெரிய ஏரியில் பாா்கவி சடலமாக மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.