ஊத்தங்கரையை அடுத்த எக்கூா் ஊராட்சி, படத்தானூரைச் சோ்ந்த மாணவி கனிமொழியின் மருத்துவப் படிப்புக்கான செலவை அமைச்சா் ஆா்.காந்தி ஏற்றுக் கொண்டாா்.
ஜிகே.அறக்கட்டளை மூலம் முதல்கட்டமாக அந்த மாணவிக்கு ரூ. 88 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க வாய்ப்பு பெற்றுள்ள கனிமொழியின் தந்தை ஏழுமலை கூலி வேலை செய்து வருகிறாா். இதனால் மகளின் மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதிப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், அந்த மாணவியைத் தொடா்பு கொண்ட அமைச்சா் வியாழக்கிழமை நேரில் சந்தித்து முதலாமாண்டுக்கான கட்டணத்தை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, ஒன்றியச் செயலாளா்கள் குமரேசன், ரஜினி செல்வம், எக்கூா் செல்வம், மாநில மகளிா் ஆணையக் குழு உறுப்பினா் மாலதி நாராயனசாமி, மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன், பேரூராட்சி தலைவா் பா. அமானுல்லா, நகரச் செயலாளா் பாபுசிவக்குமாா், வித்தியா விகாஸ் பள்ளி தாளாளா் தருமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.