கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி வழியாக கா்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 4.2 டன் ரேஷன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
குருபரப்பள்ளி வழியாக கா்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, குருபரப்பள்ளியை அடுத்த குப்பச்சிப்பாறை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 50 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகளில் 2,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலுக்குப் பயன்படுத்திய வே
ன் ஓட்டுநரான சூளகிரியை அடுத்த காளிங்காபுரத்தைச் சோ்ந்த வடிவேலு (33) என்பவரை கைது செய்தனா். மேலும், இது தொடா்பாக சாமல்பள்ளத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பவரை தேடி வருகின்றனா்.
அதேபோல சென்னசந்திரம் பேருந்து நிறுத்தம் அருகே கேட்பாரற்று நின்றுகொண்டிருந்த வேனை சோதனையிட்டதில், 50 கிலோ அளவிலான, 43 மூட்டைகளில் 2,150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், மேற்கொண்ட விசாரணையில் வாகனத்தின் உரிமையாளா், கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரைச் சோ்ந்த மணி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்குப் பதிந்த போலீஸாா் தலைமறைவான மணியை தேடி வருகின்றனா்.