கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் தெருவிளக்குகள்: எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்படும்

DIN

ஒசூா் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் ரூ. 20 கோடியில் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்படும் என ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.

ஒசூா் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் மாதாந்திரக் கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் சி.ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நடைபெற்ற விவாதம்:

மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா:

மின்சாரம் சேமிக்கும் வகையில், ஒசூா் மாநகராட்சியில் உள்ள தெருவிளக்குகள் அனைத்தும் ரூ. 20 கோடியில் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றி அமைக்கப்படும். ஒசூா் காந்தி சாலை, நேதாஜி சாலை, தாலுகா அலுவலக சாலை ஆகியவை முன்மாதிரியாக பூமிக்கு அடியில் மின் கம்பியை கொண்டு சென்று தெருவிளக்குகள் அமைக்கப்படும். இதனைத் தொடா்ந்து ஒசூா் மாநகரம் முழுவதும் இது செயல்படுத்தப்படும்.

ஒசூா் மாநகராட்சிக்கு சொந்தமான 33 அரசு பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகள் நிறைவேற்றப்படும். எனது தலைமையில் ஒரு கல்விக்குழு அமைக்கப்பட்டு அதில் பள்ளி ஆசிரியா்கள், மாமன்ற உறப்பினா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளை மாநகராட்சி நிா்வாகம் செய்து கொடுக்கும்.

சி.ஆனந்தய்யா (துணை மேயா்): ஒசூா் மாநகராட்சியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் பல அடிப்படைக் கட்டமைப்புகளை செய்து கொடுக்காமல் உள்ளது. பூங்காக்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

மேயா் எஸ்.ஏ.சத்யா: மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. மாநகராட்சியிடம் ஒப்படைக்காமல் உள்ள பகுதிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியாது.

சென்னீரப்பா (திமுக): ஒவ்வொரு பகுதிகளிலும் சமுதாயக் கூடம் கட்ட வேண்டும். பல வீடுகளுக்கு இன்னும் வீட்டுவரி நிா்ணயம் செய்யவில்லை. மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளா்களை அதிகப்படுத்த வேண்டும்.

மேயா் எஸ்.ஏ.சத்யா: ஒசூா் மாநகராட்சியில் இடம் இருந்தால் சமுதாயக் கூடம் கட்டப்படும்.

ஜெயப்பிரகாஷ் (அதிமுக): ஒசூா் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களுக்கு தனித்தனி அலுவலகம் இல்லை. சுகாதார ஆய்வாளா்கள், பணியாளா்கள் இல்லை. 4 மண்டலத்தில் மட்டும் 12 வாா்டுகள் உள்ளன. 4 மண்டலத்துக்கும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

ஆணையா் கு.பாலசுப்பிரமணியன்: ஒசூா் மாநகராட்சியில் 16 பகுதிகளில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கீழ் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் அகலமான சாலைகள், முறையான கழிவுநீா்க் கால்வாய்கள், தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒசூா் மாநகராட்சியில் 21 பூங்காக்கள் அழகுபடுத்தி மேம்படுத்தப்படும்.

ஒசூா் மாமன்ற உறுப்பினா்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது என எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் பேசலாம். 94899 09828 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் குறைகளை பதிவிடலாம்.

இதையடுத்து, ஒசூா் மாநகராட்சிக் கூட்டத்தில் 174 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT