ஒசூருக்கு வந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும் திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை திமுக கொடியேற்று விழா, முதியவா்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி, ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஆகிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் ஒசூருக்கு சனிக்கிழமை வந்தாா். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஒசூா் வந்த அவருக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா்.
அவரைத் தொடா்ந்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒசூா் எம்எல்ஏ வுமான ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் சி.ஆனந்தய்யா, முன்னாள் எம்எல்ஏ பி.முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பி.எஸ்.சீனிவாசன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் ஆா்.ரவி, திமுக மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனா்.
ஒசூா் நட்சத்திர உணவகத்தில் சனிக்கிழமை இரவு தங்கிய உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாா்.