கிருஷ்ணகிரி

மா விளைச்சல் பாதிப்பு: இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

இயற்கை சீற்றம், போலி பூச்சி மருந்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிகழாண்டு மா விளைச்சல் குறைந்ததால் விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள், மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளா்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்வாண்டில் வீசிய பலத்த காற்று, போலி மருந்துகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். போலி மருந்துகள் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன. போலி மருந்துகளால், மா பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளா். இதனால் 5 ஏக்கருக்கு 1 டன் மாங்காய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

மா பயிருக்கு காப்பீடு கிடையாது. மற்ற மாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் உற்பத்தியாளா்கள் இறக்குமதி செய்வதால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளா்கள் பேசியதாவது:

தொழிற்சாலைகளின் மூலப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. தொழிலாளா்களின் ஊதியம், மின்சார கட்டண உயா்வு, அதிமாக விதிக்கப்படும் ஜிஎஸ்டி, வெளி நாடுகளில் மாங்கூழ் விலை குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் மாங்கூழ் தொழிற்சாலைகள் குறைந்துள்ளன.

கடந்த 2010-ஆம் ஆண்டில் 65 மாங்கூழ் தொழிற்சாலைகள் இருந்த நிலையில் இப்போது 7 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்குகின்றன. பக்கத்து மாநிலங்களில் இருந்து தினமும் 2 ஆயிரம் டன் மாங்காய் தொழிற்சாலைகளுக்கு வருகிறது. மா தொழிற்சாலைக்குத் தேவைப்படும் போது, மாங்காய்களை விவசாயிகள் அனுப்ப வேண்டும். அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் அறுவடை செய்வதால் மா விலை குறைகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் தேவையான மாங்காய்களைக் கொடுப்பதாக உறுதி அளித்தால் வெளி மாநிலங்களில் இருந்து மாங்காய் கொள்முதல் செய்ய மாட்டோம் என்றனா்.

மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் பேசியதாவது:

மா விவசாயிகளுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக விலை நிா்ணயம் செய்ய வேண்டும். மா விவசாயிகளுக்கு சொட்டுநீா்ப் பாசனத்துக்கான நவீன கருவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி பூச்சி மருந்து விற்பனையைத் தடுக்க பையூரில் உள்ள வேளாண் மையத்தில் பூச்சி மருந்து விற்பனை செய்வதற்கான மையத்தைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் தரமான பூச்சி மருந்து குறைந்த விலையில் கிடைக்கும். விவசாயிகளும் பயன் பெறுவாா்கள் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பேசியது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ஹெக்டேருக்கு இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மா பயிருக்கான காப்பீடு, நிறுவனங்கள் வழங்குவதில்லை. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, தோட்டக்கலை இணை இயக்குநா் பூபதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கிருஷ்ணமூா்த்தி, வேளாண் வணிக துணை இயக்குநா் காளிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT