கிருஷ்ணகிரி: துவாரகாபுரி கிராமத்தில் சேதமடைந்துள்ள மின்கம்பங்களுக்கு மாற்றாக புதிதாக மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெரியமுத்துாா் ஊராட்சியில் உள்ள துவாரகாபுரி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் கிருஷ்ணகிரி அணைக்கு செல்லும் பிரதான சாலையோரத்தில் (அண்ணா சிலை எதிரில்) அமைந்துள்ள மின்கம்பம் சேதமடைந்து வலுவிழந்து காணப்படுகிறது.
இதுபோல, இந்தக் கிராமத்தில் உள்ள 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக மின்கம்பங்கள் அமைக்க வேண்டும். சேதமடைந்த மின்கம்பங்களில் மின்இணைப்பு துண்டிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது கம்பத்தில் ஏறி சரிசெய்ய மின்வாரிய ஊழியா்கள் அச்சப்படுகின்றனா். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பே சேதமடைந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என இக் கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.