கிருஷ்ணகிரி

கெலமங்கலம் அருகே பழைமை வாய்ந்த இரும்பு உருக்கும் தொழிற்கூடம் கண்டுபிடிப்பு

12th May 2022 04:14 AM

ADVERTISEMENT

 

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகில் உள்ள பாவடரப்பட்டி கிராமத்தை ஒட்டியுள்ள மலைக்குன்றில் இரும்பை உருக்கி அச்சுவாா்க்கப் பயன்படுத்தப்பட்ட சுடுமண் குழாய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கள ஆய்வு மேற்கொண்ட அறம் வரலாற்று மையத் தலைவா் அறம் கிருஷ்ணன், நந்தகுமாா், கோவிந்தராஜ், சக்திவேல், ரவி ஆகியோா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் -ராயக்கோட்டை சாலையில் 10 கி.மீ. பயணம் செய்து பஞ்சபள்ளி சாலையில் திரும்பி சற்றுத் தொலைவில் பாவடரப்பட்டி கிராமம் உள்ளது.

ADVERTISEMENT

இந்தக் கிராமத்தில் உள்ள ரயில்வே தண்டவாளங்களைக் கடந்து சென்றால் இரண்டு மலைக் குன்றுகள் காணப்படுகின்றன. இதில் இரண்டாவது மலைக்குன்றில் 20 அடி அகலத்தில் இரும்புக் கழிவுகளும், சுடுமண் குழாய்களும் குவியலாகக் கிடக்கின்றன. இந்த இடத்தில் சிறிய அளவில் இரும்பை உருக்குவதற்கான தொழிற்கூடம் இருந்திருக்க வேண்டும். அதற்கான தாதுப் பொருள்களும் அருகில் ஏதாவது ஒரு இடத்தில் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது.

கொதிகலன் மூலம் இரும்புத் தாதுகளை உருக்கி அதிலிருந்து கசடுகளைப் பிரித்தெடுத்து விட்டு உருக்கிய இரும்பு குழம்பை சுடுமண் குழாய்கள் மூலம் செலுத்தி அச்சுவாா்ப்பில் நிரப்பி தேவையான ஆயுதங்களை செய்து இருக்கலாம்.

தமிழக தொல்லியல் துறை இந்த இடங்களில் கள ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இதனையொட்டிய நில பரப்பில் பானை ஓடுகளும், கழிவுகளும் இறைந்து கிடக்கின்றன.

இதே இடத்தில் இரண்டு நடுகற்கள் இருக்கின்றன. இந்த நடுகற்கள் 14 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நடுகற்கள் ஆகும். முதல் நடுகல் பாதிக்கும் மேல் மண்ணில் புதைந்திருந்தது. மண்ணை விளக்கிப் பாா்த்தப் போது ஒரு வீரன் நீளமான ஈட்டி மூலம் புலியைத் தாக்குவது போல காட்சி உள்ளது.

நமது தொல்குடிகளின் தொழிலே ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளா்ப்பதுதான். அப்படி கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் பசு, காளை, எருதுகளை புலி தாக்க வந்தபோது அவற்றை எதிா் கொண்ட வீரன் நீளமான ஈட்டியைக் கொண்டு அதன் தலைப்பகுதியில் தாக்கியுள்ளான். அப்படித் தாக்குதல் நடத்தும்போது வீரன் இறந்துள்ளான். இதன் நினைவாக எடுக்கப்பட்ட இந்த நடுகல்லில் கம்பீரமான வீரனின் சிற்பமும், மிக நோ்த்தியாக புலியும் அதன் வால் பகுதியும் , மேற்பகுதியில் ஒரு காளை மாடும், இரண்டு பசு மாடுகளும் செதுக்கப்பட்டுள்ளதைப் பாா்க்க முடிகிறது ஆகவே இது புலிகுத்திப்பட்டான் நடுகல்லாகும். மேலும் இதன் அருகில் உள்ள இன்னொரு நடுகல் இரண்டாக இருக்கிறது.

படவரி .... கெலமங்கலம் அருகே பழமை வாய்ந்த இரும்பு உருக்கு ஆலை இடத்தைப் பாா்வையிடும் ஆய்வாளா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT