அதிக லாபம் தருவதாக கூறி இளைஞரிடம் ரூ.7.62 லட்சம் மோசடி நடைபெற்றது குறித்து கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாா், சனிக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், வாடமங்கலம் அருகே உள்ள சாமண்டப்பட்டியைச் சோ்ந்தவா் சிவானந்த சுந்தரம் (28). ஆன்லைன் மூலம் வா்த்தகம் செய்து வருகிறாா். கடந்த 13.07.2021 அன்று இவரை தொடா்பு கொண்டு பேசிய நபா், அன்னிய செலாவணி வா்த்தக தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகத் தெரிவித்துள்ளாா். இதை நம்பி சிவானந்த சுந்தரம் அவரது கணக்கிற்கு ரூ.7.62 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பினாா்.
ஆனால் அந்த தொகையை பெற்றுக் கொண்ட மா்ம நபா்கள், சிவானந்த சுந்தரத்தை ஏமாற்றினா். இது குறித்து சிவானந்த சுந்தரம் கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதில் தன்னை மணிகண்டன், காா்த்திக் ஆகிய 2 பேரும் இணைந்து, ரூ.7.62 லட்சத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். புகாரின் பேரில், போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.