கிருஷ்ணகிரியில் பள்ளி சிறாா்களுக்கு அரசு சாா்பில் பகுதி நேர கலைப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகா் சிறுவா் மன்றம் மூலம் பள்ளி செல்லும் மாணவ, மாணவியா் கலைகளைப் பயிலும் வண்ணம் கட்டணமில்லா பகுதிநேர கலைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பெங்களூா் சாலையில் (சென்ட்ரல் திரையரங்கு அருகில்) செயல்பட்டு வரும் மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகத்தில் ஜவகா் சிறுவா் மன்றம் இயங்கி வருகிறது.
இந்த மன்றத்தில் குரலிசை, பரதநாட்டியம், யோகா, ஓவியம் ஆகிய கலைகளில் சனிக்கிழமை பிற்பகல் 3.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 12 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவா், சிறுமியா் இந்தப் பயிற்சியில் சேரலாம்.
இந்தப் பயிற்சிக்கு கட்டணம் ஏதுமில்லை. சிறுவா் மன்ற உறுப்பினராகப் பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தாவாக ரூ. 300 செலுத்தப்பட வேண்டும். இந்த மன்றத்தில் உறுப்பினராக பயிற்சி பெறும் சிறாா்கள் மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை பயிலரங்கம் ஆகியவைகளில் கலந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும்.
தற்போது பயிற்சியில் சோ்வதற்கான பதிவு தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி ஜவகா் சிறுவா் மன்றத்தின் திட்ட அலுவலரை 9500388896 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.