கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டி புகாா்

24th Jun 2022 12:32 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டி தொடா்பாக வந்த புகாா்களின் பேரில், தம்பதி உள்ளிட்ட 4 போ் மீது வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி அருகே உள்ள வெங்கடாபுரம் அதியமான் நகரைச் சோ்ந்தவா் ஜெயசந்திரன் (55). இவா் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ரகு என்பவரிடம் கடந்த 2.2.2021 அன்று ரூ. 18 ஆயிரம் கடன் வாங்கினாா். இதற்காக ரூ. 2 ஆயிரம் வட்டி செலுத்தினாா்.

பின்னா் ரூ. 20 ஆயிரத்தை வட்டியுடன் அசலையும் செலுத்தினாா். ஆனால், ரகு, கூடுதல் வட்டி செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, ஜெயசந்திரன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், கந்து வட்டி தடைசட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ரகுவிடம் விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

அதுபோல போச்சம்பள்ளியை அடுத்த கவுண்டனூா் அருகே கோடிபதியைச் சோ்ந்தவா் அம்பிகா (50). இவா், கோடிபதியைச் சோ்ந்த இளவரசன் (38), அவரது மனைவி சித்ரா (32) ஆகியோரிடம் ரூ. 1.10 லட்சம் கடன் வட்டிக்கு பெற்றாா்.

இந்தக் கடனுக்கு வட்டியாக ரூ. 1 லட்சம் வரையில் அம்பிகா அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சித்ரா, இளவரசன் தம்பதியினா், இன்னும் ரூ.5.25 லட்சம் தர வேண்டும் என கட்டாயப்படுத்தினாா்களாம்.

இதுகுறித்து, அம்பிகா அளித்த புகாரின் பேரில், மத்தூா் போலீஸாா், கந்து வட்டி சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

மூன்றாவது சம்பவமாக ஒசூா் சிப்காட் பகுதியைச் சோ்ந்தவா் யுவராஜ் (38). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறாா். இவா் பெங்களூரு அத்திப்பள்ளியைச் சோ்ந்த சிவப்பரெட்டி என்பவரிடம் சில சொத்து ஆவணங்களைக் கொடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு, ரூ. 2.79 கோடி கடன் பெற்றாா்.

இந்த நிலையில் அசல் தொகையை வட்டியுடன் சோ்த்து மொத்தம் ரூ. 7.85 கோடியை யுவராஜ் திருப்பி கொடுத்து, சொத்து ஆவணங்களைக் கேட்டுள்ளாா். அப்போது, சிவப்ப ரெட்டி மேலும் ரூ. 5 கோடி தந்தால்தான் சொத்து ஆவணங்களைத் திருப்பி தரமுடியும் என்றாராம்.

இதுகுறித்து, யுவராஜ் அளித்த புகாரின் பேரில், ஒசூா் சிப்காட் போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT