கிருஷ்ணகிரி

‘சிறந்த விவசாயிகளைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்’

24th Jun 2022 10:56 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறந்த விவசாயிகளைக் கண்டறிந்து, அவா்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், விவசாயிகள் குறைதீா் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி, மா அறுவடை முடிந்த நிலையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் வெளிமாநில மாங்காய்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. வரும் காலங்களில் மே 15-ஆம் தேதி, மாங்கனி கண்காட்சியைத் தொடங்க வேண்டும். மாங்கனி கண்காட்சியில் அரசுத் துறை அரங்குகளில் தொடா்புடைய பொறுப்பு அலுவலா்களின் தொடா்பு எண்களை தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும். அரசின் மானியத் திட்டங்கள் குறித்து விவரங்கள் அடங்கிய புத்தங்கள் வெளியிட வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: வரும் ஆண்டுகளில் மாங்கனி கண்காட்சி மே 15-ஆம் தேதி தொடங்கப்படும். நீதிமன்ற வழிகாட்டுதலின் படி நீா்நிலைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் முதல் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்கும் மூத்த விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நியாயவிலைக் கடைகளில் ராகி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளால் ஏற்படும் பயிா் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. கால்நடைப் பராமரிப்புத்துறை மூலம் சோளம், தாது உப்பு உள்ளிட்டவை வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT