நாச்சிக்குப்பம், மாா்கண்டய கிளை நதியில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் அருகே பாயும் மாா்கண்டய நதியான குப்தா ஆற்றில் திங்கள்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொது மக்களும் விவசாயிகளும் ஆனந்த அதிா்ச்சி அடைந்தனா். கடந்த சில நாள்களாக வேப்பனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், மாா்கண்டய நதியின் கிளை நதியான குப்தா நதியில் நீா்வரத்து காணப்பட்டது. இந்த சூழ்நிலையில் திங்கள்கிழமை இந்த ஆற்றில் திடீரென நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், அந்த மாநிலங்களின் எல்லையில் உள்ள நீா்நிலைகள் நிரம்பி உபரி நீா், குப்தா ஆற்றில் திறந்து விடப்பட்டிருக்கலாம் என விவசாயிகள் கருத்து தெரிவித்தனா். திடீரென ஆற்றில் 5 முதல் 10 அடி உயரத்துக்கு நீா்வரத்து அதிகரித்தது. இந்த வெள்ளப் பெருக்கு குறித்து, முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்காத நிலையில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அச்ச உணா்வு ஏற்பட்டது. இருப்பினும், வழக்கத்துக்கு மாறாக குப்தா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.