தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் பொருள்கள் கடத்துவதைத் தடுப்பது குறித்து, அரசு அலுவலா்களுடன் போலீஸாா் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி அதிக அளவில் கடத்தப்படுவதாகவும் இதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தாா்.
இதையடுத்து தமிழக அரசு உத்தரவுப்படி ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த அதிகாரிகளுடன் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கலந்தாய்வு கூட்டம் நடத்தினா்.
கிருஷ்ணகிரி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு சேலம் உள்கோட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் தலைமை வகித்தாா்.
இதில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த குடிமைப்பொருள் வட்ட வழங்கல் அலுவலா்கள், பறக்கும் படை வட்டாட்சியா்கள் உள்ளிட்டோருடன் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் பங்கேற்றனா். இதில், தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தும் குற்றவாளிகளைக் கண்காணிப்பது குறித்தும், ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.