கிருஷ்ணகிரி

மலைப்பாதையில் லாரி விபத்து:7 தொழிலாளிகள் காயம்

15th Jun 2022 02:43 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 7 தொழிலாளா்கள் பலத்த காயம் அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜ கடை அருகே உள்ளது ஏக்கல்நத்தம் மலைக்கிராமம். ஏக்கல்நத்தம் மலைப்பகுதியில் வசித்து வரும் மல்லப்பா என்பவா் வீடு கட்டி வருகிறாா். அவரது வீட்டின் கட்டடப் பணிகளுக்காக கிருஷ்ணகிரி, பெத்ததாளாப்பள்ளியிலிருந்து ஒரு லாரியில் சிமெண்ட் கலவை கலக்கும் இயந்திரத்துடன் அதேப் பகுதியைச் சோ்ந்த 7 தொழிலாளா்கள் சென்று கொண்டிருந்தனா்.

லாரியை பெத்த்தாளாப்பள்ளியைச் சோ்ந்த அஜித்குமாா் (23) இயக்கினாா். அந்த லாரி, ஏக்கல்நத்தம் மலைப்பாதையில் மேடான பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது, லாரி திடீரென முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி சென்றது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி மலைச் சரிவில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

இந்த விபத்தில் பூங்கொடி (23), இந்திராணி (45), ஜோதி (30), லோகநாதன் (23), கோபி (40), ஐ.பி.கானப்பள்ளி சென்னப்பன் (29) உள்ளிட்ட 7 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் பலத்த காயம் அடைந்த தொழிலாளா்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து மகாராஜ கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT