உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு பின்னும் நிலத்தை அளவீடு செய்து தராத அரசு அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பெண் கோரிக்கை மனுவை திங்கள்கிழமை அளித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியைச் சோ்ந்த அலமேலு என்பவா் அளித்த மனுவின் விவரம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மூக்கம்பட்டி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இதே பகுதியில் எனக்கு சொந்தமாக, 3.60 ஏக்கா் பரப்பளவு நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து தருமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள ஆணையை இணைத்து மனு அளித்தேன். அதன்படி, கடந்த மே 24-ஆம் தேதி நிலத்திற்கு வந்த கிராம நிா்வாக அலுவலா், சா்வேயா் இருவரும் நிலத்தை அளந்து கொடுக்காமலே சென்றுவிட்டனா்.
இது குறித்து கடந்த 4-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், போச்சம்பள்ளி ஜமாபந்தியிலும், மனு அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ராமமூா்த்தி என்பவா் எங்களை அடித்து துன்புறுத்தி மிரட்டினாா். அவருக்கு அதிகாரிகளும், மேலும் சிலரும் துணை செல்கின்றனா். இது குறித்து மத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளோம். நிலத்தை அளந்து கொடுக்க போலீஸாா் பாதுகாப்புக்கு வர தயாராக உள்ள நிலையிலும், வருவாய் துறையினா் நிலத்தை அளந்து தர மறுக்கின்றனா். சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு, 12 வாரங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.