காவேரிப்பட்டணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள என்.மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த நேதாஜி (48), கடந்த 8-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்கு சென்றாா். பின்னா் வீடு திரும்பியபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது, வீட்டில் வைத்திருந்த ரூ. 70,000 மதிப்பிலான மூன்றரை பவுன் தங்க நகைகள், ரூ. 5,000 மதிப்பிலான வெள்ளிச் சங்கிலி திருட்டுப் போனது தெரியவந்தது.
காவேரிப்பட்டணம் போலீஸாா் வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை செய்ததில், பண்ணத்தூரைச் சோ்ந்த எம்.காா்த்திக் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மறைந்திருந்த காா்த்திக்கை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனா்.