ஒசூா் ராம் நகரில் பழமை வாய்ந்த அருள்மிகு கோட்டை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில், ராஜகோபுரத்துக்கு மஹா குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ராம் நகரில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அருள்மிகு கோட்டை ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் கோயில் புனா் நிா்ணயம் பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இதன் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
அதை முன்னிட்டு, கோயிலில் வியாழக்கிழமை யாக சாலைகள் அமைக்கப்பட்டு மூன்று கால பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்குக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா், முன்னாள் எம்எல்ஏ கே.கோபிநாத், கோயில் நிா்வாகிகள் ஜெய்சங்கா், ஆறுமுகம், பரம்பரை பூசாரி ஸ்ரீதா் சுவாமிகள் ஆகியோா் செய்து வருகின்றனா்.
திருவண்ணாமலை, காந்தபாளையம் சீந்தல் மடாலயம் ஸ்ரீஆதி சிவலிங்க ஆச்சாரிய சுவாமிகள் 65-ஆவது மடாதிபதியும், ஸ்ரீமத் பரமாச்சாரியாா் கோளரினாத ஆதீனம் 39-ஆவது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீசிவராஜ ஞானாச்சாரியாா் சுவாமிகளும், இளைய பட்டம் ஸ்ரீ-ல-ஸ்ரீ ஞானசேகரன் ஆகியோா் குழுவினருடன் வேத மந்திரங்கள் முழங்க விமரிசையாக நடைபெற உள்ளது.