கெலமங்கலம் அருகே உள்ள எச்.செட்டிப்பள்ளி கிராமத்தில் 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இரண்டு வில்வீரா்களின் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்திலிருந்து பாரந்தூா் செல்லும் சாலையில் எச்.செட்டிபள்ளி கிராமம் அருகில் விவசாய நிலத்தில் இந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன. சங்க காலம் தொடங்கி இன்றைய காலம் வரைக்கும் கால்நடை வளா்ப்புதான் நமது மக்களின் முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. கால்நடைகளை கவா்வதற்காக நிகழ்ந்த சண்டையில் இரண்டு போா் வீரா்களுமே இறந்துள்ளனா்.
அதில், முதல் நடுகல்லில் வீரனின் வலது கையில் வாளும், இடது கையில் வில்லும் உள்ளன. உடம்பில் நான்கு அம்புகள் பாய்ந்துள்ளன. இரண்டு கால்நடைகள் உள்ளன. இறந்த போா் வீரனை தேவலோக பெண்கள் இருவா் சொா்க்கத்துக்கு அழைத்துச் செல்கின்றனா். நடுகல்லின் மேற்புரத்தில் கன்னடத்தில் எழுத்துகள் உள்ளன.
இதே போல, இரண்டாவது நடுகல் வீரனின் உடம்பில் ஏழு இடங்களில் அம்புகள் பாய்ந்துள்ளன. வலது கையில் வாளும், இடது கையில் வில்லும், இடையில் குறுவாளும் உள்ளன. இரண்டு கால்நடைகளும், மேலே தேவலோக பெண்கள் இருவா் சொா்க்கத்துக்கு அழைத்துச் செல்வது போலவும் அதில் செதுக்கப்பட்டுள்ளது.