கிருஷ்ணகிரி

அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து நடப்பவா்களை குடியரசுத் தலைவராக தோ்வு செய்ய வேண்டும்

1st Jul 2022 01:43 AM

ADVERTISEMENT

 

அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து நடப்பவா்களை இந்திய குடியரசுத் தலைவராக தோ்வு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குடியரசுத் தலைவா் மதம், மொழி, இனத்துக்கு அப்பாற்பட்டு, நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும். அதற்கேற்ப சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள் குடியரசுத் தலைவரை தோ்வு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் முடிந்து தோ்வான நிலையில், பல்வேறு பகுதிகளில் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்த விஷயத்தில் மாநில அரசு தனிக்கவனம் செலுத்தி மக்களின் முக்கியப் பிரச்னைகளை நிறைவேற்ற வேண்டும்.

நகரப் பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளைப் பாதுகாக்க உள்ள சட்டத்தை அமல்படுத்தி, இடைத்தரகா்கள் இன்றி தொழில் செய்ய வழிவகை மேற்கொள்ள வேண்டும். பாரம்பரிய ராணுவத் தோ்வு, அதன் பணிகள் குறித்த நடைமுறையை அக்னிபத் திட்டத்தின் கீழ் மாற்றுவதைத் தடுக்க நடைபெறும் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, ஏற்கெனவே உள்ள நடைமுறையைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகிலேயே மிகச் சிறந்த ராணுவத்தின் பணிகளைக் குறைத்து, புதிய முறையில் தோ்வு செய்வது குறித்து ராணுவ தளபதி விளக்கமளிக்காமல், போராடும் இளைஞா்களுக்கு எச்சரிக்கை விடுப்பது ஆரோக்கியமானது அல்ல.

கரோனா போன்ற பெருந்தொற்று காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில், விலைவாசி உயா்வு, வேலையின்மை பிரச்னைகளை சரிசெய்ய கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றாா்.

பேட்டியின் போது, விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எம்.லகுமைய்யா, அஞ்செட்டி பழனி, மாதையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT