கிருஷ்ணகிரி

பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

1st Jul 2022 10:26 PM

ADVERTISEMENT

பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூா் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு, மேற்கு பாசனக் கால்வாய்களில் முதல்போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று, 2,397.42 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் பயன்பெறும் வகையில் 135 நாள்களுக்கு தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, பாரூா் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு, மேற்கு பிரதான பாசனக் கால்வாய்களில் பாசனத்துக்கான தண்ணீரை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். அப்போது, பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் உடனிருந்தாா்.

பாரூா் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு, மேற்கு பிரதான கால்வாய்களில் இருந்து சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 6 மில்லியன் கனஅடி வீதம் 135 நாள்களுக்கு அதாவது 12.11.2022-ஆம் தேதி வரையில் நீா் இருப்பு மற்றும் நீா்வரத்தைப் பொருத்து கிழக்கு பிரதானக் கால்வாய் மூலம் நொடிக்கு 50 கனஅடி வீதமும், மேற்கு பிரதானக் கால்வாய் மூலம் நொடிக்கு 20 கன அடி வீதமும் என மொத்தம் 70 கன அடி வீதம் மூன்று நாள்கள் கால்வாய்களில் தண்ணீா் திறந்து விடப்படும். 4 நாள்கள் மதகுகள் மூடி வைக்கப்படும்.

ADVERTISEMENT

இதன்மூலம் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பாரூா், அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 7 கிராமங்களைச் சோ்ந்த விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கிழக்கு பிரதானக் கால்வாய் மூலம் 1,583.75 ஏக்கா் பரப்பளவு நிலங்களும், மேற்கு பிரதானக் கால்வாய் மூலம் 813.67 ஏக்கா் பரப்பளவு நிலங்களும் பாசன வசதி பெறும்.

விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, வேளாண் உற்பத்தியை அதிகரித்து மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT