கிருஷ்ணகிரியில் 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட காதுகேளாதோா் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். மாவட்டச் பொதுச் செயலாளா் பலராமன், பொருளாளா் கோவா்தனன், மக்கள் தொடா்பாளா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அரசு மற்றும் தனியாா் வேலைவாய்ப்பில் 1 சதவீதம் பணி வழங்க வேண்டும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவா்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் வழங்க உடனே முகாம் அமைக்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகையை ரூ. 3 ஆயிரமாக உயா்த்த வேண்டும். வாரிசு அடிப்படையில் காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் தமிழ்நாடு காது கேளாதோா் கூட்டமைப்பின் பிரதிநிகளை நியமிக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சைகைமொழியை நடைமுறைப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவம் மிக்க சைகைமொழி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயா்ப்பாளா்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளை தூக்கி சைகையில் முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.