கிருஷ்ணகிரி

மல்லாபுரம் சிவன் கோயிலில்வரலாற்று குழுவினா் ஆய்வு

18th Jan 2022 12:31 AM

ADVERTISEMENT

மத்தூா் அருகே உள்ள மல்லாபுரம் சிவன் கோயிலில் வரலாற்று குழுவினா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளக்கரை அருகே மல்லாபுரம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலை ஆராய்ந்து விளக்கம் அளிக்க வேண்டும் என கிராம மக்கள் கேட்டுக் கொண்டதற்கேற்ப, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினரும் அந்தக் கோயிலை ஆய்வு செய்தனா். இதுகுறித்து, அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ் தெரிவித்ததாவது:

மல்லாபுரம் கிராமத்தில் ஒரே காலத்தில் கட்டப்பட்ட சிவன், பெருமாள் கோயில்கள் உள்ளன. சிவன் கோயிலின் உள்மண்டபத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வீர ராமநாதன் காலத்தைச் சோ்ந்த ஒரு கல்வெட்டும், மற்ற நான்கு கல்வெட்டுகளும் கோயிலின் பின்பகுதியிலும், பக்கவாட்டிலும் அமைந்துள்ளன.

இவை கோயில் கட்டப்பட்ட காலத்தினை நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. ஐராவதீஸ்வரா் என்று தற்போது அழைக்கப்படும் சிவன் கோயில், கல்வெட்டுகளில் வெள்ளானை விடங்கா் என்று தூய தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயநகர காலத்தில் தமிழகத்தின் பல ஊா் பெயா்களும் இறைவன் பெயா்களும் தமிழ் மொழியில் இருந்ததை சம்ஸ்கிருத மொழிக்கு மாற்றியுள்ளனா். அவ்வாறு, மாற்றப்பட்ட இறைவன் பெயா்களில் இதுவும் ஒன்றாகும். விடங்கா் என்னும் சொல் உளிபடாது சுயம்புவாக உருவான லிங்கம் என பொருள்படும்.

ADVERTISEMENT

இந்த கோயிலில் மொத்தம் 5 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டில் இந்த ஊரின் தற்போதைய பெயரான சூளைகிறை என்பது தற்போது சூலகரை என்று அழைக்கப்படுகிறது. மற்றொரு கல்வெட்டில், ஆடையூா் நாட்டைச் சோ்ந்த மக்கள் சோ்ந்து இந்தக் கோயிலுக்கு தானத்தை கொடுத்த செய்தியை அறிய முடிகிறது.

700 ஆண்டுகள் பழைமையான முருகன் மற்றும் தட்சிணாமூா்த்தி, சண்டிகேஸ்வரா், விநாயகா் ஆகியோருடைய சிலைகள் இடைக்காலத்தில் உடைக்கப்பட்டு சிவன் கோயிலின் அருகே வைக்கப்பட்டுள்ளன. பெருமாள் கோயிலின் துவாரபாலகா் சிற்பங்களும் உடைந்த நிலையில் உள்ளன.

இரண்டு கோயில்களிலும் உள்ள மண்டபத் தூண்களில் பல்வேறு வகையான புராண சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான தூண் சிற்பங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணன் கோயில், மல்லப்பாடி, அத்திமுகம், சூளகிரி, சின்னக்கொத்தூா் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இந்த ஊரில் அருகருகே சிவன், பெருமாள் கோயில்கள் உள்ளன. அந்த காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஊராக இந்த கிராமம் விளங்கியது தெரிய வருகிறது என்று தெரிவித்தாா்.

வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவா் நாராயணமூா்த்தி, ஒருங்கிணைப்பாளா் தமிழ்செல்வன், ரவி, விஜயகுமாா், சதானந்த கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT