ஒசூா் மாநகரப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித் திரிந்தால், அதன் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என ஒசூா் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகரப் பகுதியில் ஏராளமான கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. இதை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனா். சாலைகளில் கால்நடைகள் திரிவதால் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. இதனால், இந்த கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை விடப்பட்டது.
அதனடிப்படையில், மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம் உத்தரவின்பேரில், மாநகராட்சி துப்புரவு ஆய்வாளா்கள் சுந்தரமூா்த்தி, கிரி, மணி உள்ளிட்டோா் தலைமையில் மாநகராட்சி பணியாளா்கள் மாடுகளை பிடித்து காமராஜா் காலனியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனா். தொடா்ந்து, கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
இதேபோல தொடா்ந்து மாடுகளை சாலைகளில் திரியவிட்டால் அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து கோசாலைக்கு அவை அனுப்பப்படும். பின்னா் கால்நடைகளின் உரிமையாளா்கள் மீது பொதுசுகாதார சட்டத்தின்படி வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.