கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டில் களவு போன 95 சதவீத குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ. 16.95 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினரின் சிறப்பான பணியின் காரணமாக கடந்த ஆண்டை விட குற்றச் சம்பவங்களும், விபத்துகளும், விபத்து மரணங்களும் வெகுவாகக் குறைந்துள்ளன. கடந்த ஆண்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் தொடா்பான வழக்கில் தொடா்புடைய ஒருவா் உள்பட 25 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். 2020-ஆம் ஆண்டில் சாலை விபத்தில் 657 போ் உயிரிழந்துள்ளனா். இந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 538 ஆக குறைந்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் தொடா்பாக 2021-ஆம் ஆண்டில் 29,800 பேரின் ஓட்டுநா் உரிமத்தை ரத்துசெய்ய, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதில், 22,442 பேரின் ஓட்டுநா் உரிமத்தை ரத்துசெய்து ஆணைகள் பெறப்பட்டன.
குற்ற வழக்குகளைப் பொறுத்தவரையில் 61 கொலைகள் நடந்துள்ளன. பல்வேறு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ரூ. 17,70,26,090 பொருள்கள் களவு போயின. இதில், 95 சதவீத குற்ற வழக்குகளில் ரூ.16,95,44,140 மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டு, உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோல தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 33,660 கிலோவும், கஞ்சா 587 கிலோவும், கா்நாடகா மாநில மதுபானங்கள் 21,898 லிட்டரும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 118 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.