ஒசூா் அருகேயுள்ள டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் பழைமை வாய்ந்த தா்மராஜா கோயில் உள்ளது.
இந்த கோயிலில் கடந்த சில ஆண்டுகளாகப் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. ரூ. 3.50 கோடி செலவில் கோயில் கோபுரங்களின் கட்டுமானப் பணிகளும், கோயில் கட்டடப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து சனிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதனையொட்டி பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து கோயிலின் கோபுர கலசங்கள் மீது மலா் தூவப்பட்டன. ஹெலிகாப்டா் கோயிலைச் சுற்றி பல முறை வட்டங்கள் அடித்து மலா்களை கோபுரத்தின் மேலும் மக்கள் மீதும் தூவியது.
இந்த கும்பாபிஷேக விழாவில் டி.கொத்தப்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனா்.