கிருஷ்ணகிரி

ஆவத்துவாடி மாரியம்மன் கோயில் திருவிழா: நூதன முறையில் வேண்டுதலை நிறைவேற்றிய பக்தா்கள்

17th Feb 2022 03:27 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஆவத்துவாடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நூதன முறையில் தங்களது வேண்டுதலை புதன்கிழமை நிறைவேற்றினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஆவத்துவாடி மாரியம்மன் கோயில் திருவிழாவை மோட்டூா், சுண்டகாப்பட்டி ஆகிய கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனா். மாரியம்மன் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், கூழ் ஊற்றுதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, கோயில் பூசாரி தனது தலையில் பூங்கரகம் சுமந்தபடி, மேளதாளங்கள், பம்பை இசைக்க அருள் வந்த நிலையில், கோயிலிருந்து நடந்து சென்றாா். அப்போது, ஆண்கள், பெண்கள் ஈரத் துணிகளுடன் தரையில் கவிழ்ந்து படுத்த நிலையில் கிடக்க, கோயில் பூசாரி, அவா்கள் மீது நடந்து சென்றாா். இவ்வாறு பூசாரி நடந்து சென்றால் தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. இந்த நூதன வேண்டுதலில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று நிறைவேற்றினா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, கோயில் முன் உள்ள காவல் தெய்வமான குதிரை சிலைக்கு கொள்ளு தானியத்தை சமைத்து படையலிடும் நிகழ்வு நடைபெற்றது. இரவு வானவேடிக்கையும் நடைபெற்றன. இந்த திருவிழாவில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று கொண்டாடினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT