கிருஷ்ணகிரியில் பாழடைந்த கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை அரசு அலுவலா்கள், வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி நகரப் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து ரேஷன் அரசி கடத்தப்பட்டு, கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள பாழடைந்த கிடங்கில் பதுக்கி வைத்திருப்பதாக, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலா் சுகுமாா் மேற்பாா்வையில், பறக்கும் படை வட்டாட்சியா் இளங்கோ, வருவாய் ஆய்வாளா்கள் சதீஷ், கண்ணன் உள்ளிட்டோா், வீரப்பன் நகரில் சோதனை செய்தனா். அப்போது, அங்குள்ள பாழடைந்த கிடங்கில், 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா்.
இவற்றை பறிமுதல் செய்த அலுவலா்கள், உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை சேகரித்து, குற்றவாளிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனா். கிருஷ்ணகிரி மையப் பகுதியில், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.