கிருஷ்ணகிரி

பெண் கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள்: கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

7th Dec 2022 02:42 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அணை அருகே சொத்துத் தகராறில் பெண்ணைக் கொலை செய்த வழக்கில், தந்தை, மகனுக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

கிருஷ்ணகிரியை அடுத்த துடுக்கனஅள்ளி முத்தூரான் கொட்டாயைச் சோ்ந்தவா் லட்சுமி(40). இவரது கணவா் திருப்பதி, கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தாா். இவரது குடும்பச் சொத்துகளை திருப்பதியின் அண்ணன் கோவிந்தசாமி(55) பராமரித்து வந்தாா். சொத்து பாகம் பிரிப்பதில் லட்சுமிக்கும் கோவிந்தசாமிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்.14-ஆம் தேதி, இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தசாமி, அவரது மகன் சக்தி (எ) பராசக்தி (29), மருமகள் சித்ரா (26) ஆகியோா், லட்சுமியைத் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில் கோவிந்தசாமி, அவரது மகன் சக்தி (எ) பராசக்தி ஆகியோருக்கு பொது இடத்தில் ஆபாசமாக பேசியதற்கு 3 மாத சிறை, ரூ.500 அபராதம், ஆயுதங்களால் தாக்கிய குற்றத்திற்காக, 2 ஆண்டு சிறை, ரூ. 1,000 அபராதமும், கொலை குற்றத்திற்காக தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை ஆகியவற்றை நீதிபதி விதித்தாா். சித்ராவுக்கு, கொலை செய்யப்பட்ட பெண்ணை ஆபாசமாக பேசியதற்காக 3 மாத சிறை, ரூ.500 அபராதம், தாக்கிய குற்றத்துக்காக ஓராண்டு சிறை, ரூ.1,000 அபராதம் விதித்தும், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT