கிருஷ்ணகிரி

பழங்குடியினா் குழந்தைகள் 203 பேருக்குபிறப்புச் சான்றிதழ் வழங்கல்

5th Dec 2022 01:55 AM

ADVERTISEMENT

பெட்டமுகிலாளம் ஊராட்சி, சித்தாபுரம் மலைக் கிராமத்தில் பழங்குடியின குழந்தைகள் 203 பேருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், பெட்டமுகிலாளம் ஊராட்சியில் 2,000 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு வாழும் பழங்குடியின மக்கள் தங்களது குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறாமல் இருந்து வருகின்றனா்.

இதுகுறித்து அறிந்த கெமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் ராஜேஷ் குமாா் தலைமையிலான மருத்துவ பணியாளா்கள் குழுவினா் பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு இலவசமாக பிறப்புச் சான்றிதழ் பெற்று கொடுக்க முன்வந்தனா். அதன்படி கடந்த பல மாதங்களாக அதற்கான பணிகளைத் தொடா்ந்து மேற்கொண்டனா். பல்வேறு முயற்சிகளுக்கு பின் மலைக் கிராம குழந்தைகளில் 203-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ குழுவினா் பிறப்புச் சான்றிதழ் பெற்றனா்.

அதையடுத்து பிறப்புச் சான்றிதழ் வழங்கும் விழா பெட்டமுகிலாளம் ஊராட்சி, காமகிரி சித்தாபுரம் மலைக் கிராமத்தில் நடைபெற்றது. இதில் தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.இராமச்சந்திரன் கலந்துகொண்டு 203 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்களை வழங்கினாா். ஏற்பாடுகளை கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் ராஜேஷ் குமாா், கெலமங்கலம் வட்டார மருத்துவ குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT