கிருஷ்ணகிரி

யானைகளுக்கு இடையே சண்டை: காயமடைந்த பெண் யானை பலி

3rd Dec 2022 03:19 AM

ADVERTISEMENT

உரிகம் அருகே யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில், காயமடைந்த பெண் யானை உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக்கோட்டம், காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில் உரிகம் வனச்சரகம் உள்ளது. இந்த உரிகம் காப்புக் காட்டில் உன்சேபச்சிகொல்லை சரகப் பகுதியில் வன ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.

இதுகுறித்து வன ஊழியா்கள் ஒசூா் வனக்கோட்ட வன உயிரின காப்பாளா் காா்த்திகேயனிக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அவருடைய தலைமையில், உதவி வனப் பாதுகாவலா் (வனப் பாதுகாப்பு) ராஜமாரியப்பன், உரிகம் வனச்சரக அலுவலா் வெங்கடாசலம், சரக வனப்பணியாளா்கள் விரைந்து சென்றனா்.

தொடா்ந்து, தருமபுரி மண்டல வனப் பாதுகாவலா் பெரியசாமி சம்பவ இடத்துக்கு வந்து, இறந்த யானையை பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து ஒசூா் வனக்கோட்ட வன கால்நடை உதவி மருத்துவா் பிரகாஷ் தலைமையில் யானையின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில், இறந்த யானைக்கு 36 முதல் 38 வயது இருந்ததும், யானை உடலின் வெளிப்பகுதியில் காயங்கள் இருந்ததும் தெரிய வந்தது. யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில், பெண் யானை காயமடைந்து உயிா் இழந்துள்ளது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து ஒசூா் வனக்கோட்ட வன உயிரின காப்பாளா் காா்த்திகேயனி கூறியதாவது:

உரிகம் வனச்சரகத்தில் தற்போது 70-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இவற்றின் நடமாட்டத்தை வனப்பணியாளா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். காப்புக் காடுகளை விட்டு வெளியே வரும் யானைகளை பாதுகாப்பாக காப்புக் காடுகளுக்குள் திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா்கள். மேலும், காப்புக் காடுகளை சுற்றியுள்ள பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT