கிருஷ்ணகிரி

ஒசூரில் அசோக் லேலண்ட் நிா்வாகத்தை கண்டித்து தொழிலாளா்கள் போராட்டம்

2nd Dec 2022 02:07 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இயங்கி வரும் பிரபல கனரக வாகன தொழிற்சாலையான அசோக் லேலண்ட் நிா்வாகத்தைக் கண்டித்தும், தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்தும் தொழிற்சாலை வாயில் முன்பு வியாழக்கிழமை தொழிலாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒசூா் அசோக் லேலண்ட் யூனிட் 1, யூனிட் 2 ஆகிய தொழில்சாலைகளில் உற்பத்தியை பெருக்கும் வகையில், கடந்த நவ. 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொழிலாளா்களுக்கு வேலை நாளாக அறிவித்தது. இதற்கு மாற்றாக டிச. 1-ஆம் தேதி விடுமுறை தினமாக அறிவித்தது. இதற்கு அசோக் லேலண்ட் தொழிலாளா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து கடந்த நவ. 27-ஆம் தேதி தொழிற்சாலைக்கு பணிக்கு செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ஒப்பந்த தொழிலாளா்களையும் பணிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினா்.

இந்த நிலையில், நிா்வாகம் அறிவித்தபடி டிச. 1-ஆம் தேதி அசோக் லேலண்ட் தொழிற்சாலைக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அசோக் லேலண்ட் தொழிலாளா்கள் தொழிற்சங்கத் தலைவா் குசேலா் தலைமையில் யூனிட் 1, யூனிட் 2 ஆகிய இடங்களில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தொழிலாளருக்கு எதிராக நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை வேலை நாளாக அறிவிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது. உற்பத்தியைப் பெருக்க இதுபோன்று தொழிலாளா்களை நசுக்கக் கூடாது என தொழிலாளா்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

இதுகுறித்து நிா்வாகத்திடம் பேசி சுமூக தீா்வு காணப்படும் என அச்சங்கத்தின் தலைவா் குசேலா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT