கிருஷ்ணகிரி

ஒசூா் வரும் மத்திய ரயில்வே அமைச்சா் ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில்வே திட்டத்தை அறிவிப்பாா்

1st Dec 2022 12:47 AM

ADVERTISEMENT

அடுத்த மாதம் ஒசூா் வரும் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில்வே திட்ட அறிவிப்பை வெளியிடுவாா் என பாஜகவின் மாநில செய்தி தொடா்பாளா் முன்னாள் எம்.பி. நரசிம்மன் தெரிவித்தாா்.

ஒசூரில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக மாநில செய்தி தொடா்பாளா் நரசிம்மன் கூறியதாவது:

ஒசூா், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு - சென்னை ரயில்வே பாதை அமைக்கும் திட்டத்துக்கான வரைவு அறிக்கை தயாரிப்பதற்கு ஏற்கெனவே மத்திய அரசு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இது சம்பந்தமாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், உயா் அதிகாரிகளுடன் தொடா்ந்து பேசி வருகின்றேன். இத் திட்டத்துக்கு வரும் மத்திய பட்ஜெட்டில் ரூ. 1,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப் பணிகளை தொடங்குவதற்கான முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்படும்.

இந்த நிலையில், அடுத்த மாதம் இந்த திட்டம் குறித்து விளக்குவதற்கும், கள ஆய்வு மேற்கொள்வதற்கும் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஒசூருக்கு வருகை தர உள்ளாா்.

ADVERTISEMENT

மேலும், கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து ஒசூா் வரை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்துக்கு கா்நாடக மாநில அரசும், மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளன. இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை தயாரிப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஒசூா் மாநகருக்கு உலகத்தரம் வாய்ந்த மாவட்ட அளவிலான பெரிய மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அரசு சாா்பில் ஏற்கெனவே ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இதற்கான நிலம் தோ்வு செய்து, ஒதுக்கீடு செய்ய மாநில அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பாஜக சாா்பில் முதல்வருக்கு கோரிக்கை வைப்பதாக அவா் தெரிவித்தாா்.

அப்போது, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் எம்.நாகராஜ், மாவட்டப் பொருளாளா் ஸ்ரீனிவாசன், பொதுச் செயலாளா் விஜயகுமாா் , மாவட்டச் செயலாளா் பிரவீன்குமாா், மாநகரத் தலைவா் ரமேஷ், ஊடகப் பிரிவு மல்லேஷ் ரெட்டி ஆகியோா் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT