கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையிலிருந்து நொடிக்கு 5,800 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி அருகே தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான பெங்களூரு, ஆந்திரம், கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்துப் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கிருஷ்ணகிரி அணைக்கு வெள்ளிக்கிழமை நிலவரப்படி நொடிக்கு 623 கன அடியாக இருந்த நீா்வரத்து, தொடா் மழை காரணமாக சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் 5,800 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த நீா்மட்டம் 52 அடியில் தற்போது 50.30 அடியை எட்டியுள்ளதையடுத்து, பாதுகாப்பு கருதி அணையிலிருந்து தென் பெண்ணை ஆற்றில் பிரதான மதகுகளான எண் 5, 7 மூலம் நொடிக்கு 5,800 கனஅடி நீா்த் திறந்து விடப்பட்டுள்ளது.
அணை பூங்காவுக்குச் செல்லும் தரைப்பாலமும் நீரில் மூழ்கியுள்ளது. அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரித்துள்ளது குறித்து தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்ட நிா்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா். தென் பெண்ணை ஆற்றின் கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.